கரீபியன் தீவில் பிரித்தானிய தம்பதியர் தங்கள் தேனிலவு நேரத்தை நீச்சல் குளம் ஒன்றில் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தபோது நீச்சல் குளத்தின் சுவர்கள் உடைந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த புதுமணத்தம்பதியர் Sandals Royal Curaçao என்னும் ஐந்து நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்த கடலை நோக்கிய, கடலை ஒட்டிய நீச்சல் குளத்தில் சுமார் 20 பேர் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, திடீரென நீச்சல் குளத்தின் சுவர்கள் உடைய, நீச்சல் குளத்தில் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தவர்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.
புதுமணப்பெண்ணான Jelizaveta தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு தடுமாறி தண்ணீரிலிருந்து எழ முயன்றபோது, தன் தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார். அவரது கணவருக்கும் தலையில் அடிபட்டுள்ளது.
மொத்தம் 12 பேர் வரை காயமடைந்த நிலையில், அவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். Jelizavetaவுக்கு காயம் ஆழம் என்பதால் தையல் போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த கரீபியன் ரிசார்ட் தற்போது மூடப்பட்டுள்ளது.