பொதுவாக இன்றும் பல நிறுவனங்களில் இருக்கும் ஒரு நிபந்தனை எனில், அது ஊழியர்கள் தங்களது சம்பளத்தினை மற்றொருவரிடம் வெளிப்படுத்த கூடாது என்பது தான்.
அப்படி தனது சம்பளத்தினை வெளிப்படுத்திய பெண்னை அமெரிக்க நிறுவனம் ஒன்று பணி நீக்கம் செய்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெண், பிரபல சமூக வலைதளமான டிக்டாக்கில் தனது சம்பளம் குறித்து வீடியோ வெளியிட்டதால் தனது வேலையினையே இழந்துள்ளார்.
அமெரிக்காவின் டென்வரை சேர்ந்த லெக்ஸி லார்சன் என்பவர் தான் வேலையை இழந்த பெண். இவர் முன்னதாக அக்கவுண்ட்ஸ் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு தான் அவருக்கு தொழில் நுட்ப பிரிவில் பதவி உயர்வும் கிடைத்துள்ளது. இதற்காக சம்பள உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 70,000 டாலர்கள் சம்பளமாக பெற்று வந்த லார்சன், பதவி உயர்வுக்கு பிறகு 90,000 டாலர்களையும் சம்பளமாக பெற்றுள்ளார். இது குறித்து தான் டிக்டாக்கிலும் ஒரு விரிவான வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் நிறுவனத்தின் சில ரகசியங்களை வெளியிட்டாதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் லார்சன் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் தொழிலாளர் சட்டத்தின் படி, ஊழியர்கள் தங்களது சக ஊழியர்களுடன் சம்பளத்தினை பேச அனுமதிக்கின்றது. எனினும் நிறுவனம் சார்ந்த லோகோ உள்ளிட்டவற்றை பகிரக் கூடாது என்ற சில கட்டுப்பாடுகளும் உண்டு.
லார்சன் நிறுவனத்தின் ரகசிய தகவல் ஏதேனும் ஒன்றை பகிர்ந்திருக்கலாம்,. அதனால் நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்துள்ளது என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
மொத்தத்தில் சம்பளம் அதிகரிப்பு பெற்ற கையோடு பணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள லார்சனுக்கு, நிச்சயம் இது ஒரு சரியான பாடமாக இருக்கும் எனலாம்.
ஊழியர்கள் தங்களது நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். இது லார்சனுக்கு மட்டும் அல்ல, பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்குமே பொருந்தும். இது உங்களை இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து கொள்ள உதவும்.