அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் புலம்பெயர் மக்களின் தங்கும் விடுதிக்கு வெளியே பஸ்ஸுக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அச்சம்பவத்தில் சிக்கி 7 புலம்பெயர் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்த பகுதி தொடர்பான புகைப்படங்கள் காண்போரை கலக்கமடைய செய்துள்ளதாக சமூக ஊடக பக்கத்தில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 7 புலம்பெயர் மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், குறைந்தது 6 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் கூறுகின்றனர்.
பிரவுன்ஸ்வில்லே பகுதியில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர் தங்கும் விடுதிக்கு வெளியே பலர் சிட்டி பேருந்துக்காக காத்திருந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அந்த கார் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கைதான நபர் ஸ்பானிய மொழி பேசும் லத்தீன் அமெரிக்கர் எனவும் பிரவுன்ஸ்வில்லில் வசிப்பவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், குறித்த தாக்குதலானது திட்டமிட்ட செயல் என்றே பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.
மேலும், தற்போது அந்த நபர் மீது கட்டுப்பாடற்ற முறையில் வாகனம் செலுத்தியதாக மட்டும் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் மேலதிக வழக்குகள் பதியப்படும் என பொலிஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.