கனடா நாட்டின் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 ஜனவரி எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் முன்பு இருந்ததை விட மக்கள் தொகை அதிகரித்திருப்பதாக கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 1,050,110 மக்கள் கனடாவில் அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது கனடாவின் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் எப்போதும் இருந்ததை விட அதிகமானதாகும்.
கடந்த 1957 முதல் 2.7 சதவிகிதமாக இருந்த மக்கள் தொகை அதிகரிப்பு தற்போது 3.3 ஆக ஓராண்டில் அதிகரித்துள்ளது.
உலகப்போருக்கு பின்பான பிறப்பு விகிதம் அதிகரித்தனால் மட்டுமில்லாமல், பிற நாடுகளிலிருந்து வரும் அகதிகளை கனேடிய அரசு வரவேற்பதாலும் அதிகரித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அகதிகள் குடியேற்றம் அதிகரிப்பதன் காரணமாக குறிப்பிட்ட G7 நாடுகளில் கனடா மக்கள் தொகை அதிகரிப்பதில் முன்னிலையில் இருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு 437,180 அகதிகள் கனடா நாட்டில் குடியேறியுள்ளனர். அதில்லாமல் தற்காலிகமாக தங்கிப் பணி புரிபவர்கள் சுமார் 607,782 பேர் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த எண்ணிக்கை எப்போதுமில்லாத புது விதமான சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் நிறைய அகதிகளின் குடியுரிமை பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகிறது.
தற்காலிகமாக குடிபெயர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையும் முன்பு எப்போதுமில்லாத அளவு அதிகரித்திருப்பதால், மக்கள் தொகை இந்த அளவு அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
கனடாவில் வேலைகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச இடம்பெயர்வு மற்றும் ரஷ்ய உக்ரைன் படையெடுப்பிலிருந்து வெளியேறும் மக்களை வரவேற்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளியியல் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.