பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விற்பனையாகி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110ஐ கடந்துள்ளது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். டீசல் விலையின் கடுமையான அதிகரிப்பால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளது.
45 நாட்களாக
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் காரணமாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல் டீசல், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மீண்டும் உயர்ந்தது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்து வருகிறது. இந்நிலையில் 45 நாட்கள் கழித்து பெட்ரோல், டீசல் விலை குறைகிறது.
கலால் வரி குறைப்பு
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த கலால் வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5, டீசல் ரூ. 7 குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கேஸ் சிலிண்டர் மானியம்
மேலும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையும், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.1000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 9 கோடி பயனாளிகளுக்கு ஒரு கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியமாக வழங்குவோம் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சுங்க வரி குறைப்பு
மேலும், உர மானியமாக ரூ.1.10 கோடி கூடுதலாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 1.05 லட்சம் கோடியுடன் வழங்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் இறக்குமதி சார்ந்து அதிகம் உள்ள பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சில இரும்பு மூலப்பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்றும், சில இரும்பு தயாரிப்புகளுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.