தேடுதல் இன்ஜின் உலகின் காட்ஃபாதரான கூகுள் நிறுவனம் தனது புதிய வளாகத்தை சான் ஃப்ரான்ஸிஸ்கோ கடற்கரையோரம் உருவாக்கியுள்ளது.அதன் மற்ற அலுவலகங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் இந்தப் புதிய கட்டடத்தைப் பார்ப்பவர்கள் எடுத்தவுடன் கவனிப்பது இதன் கூரையைத் தான்.
முழுக்க முழுக்க சோலார் பேனல்களால் நிரம்பப்பட்ட இந்தக் கூரை பார்ப்பதற்கு ட்ராகன் செதில்கள் வடிவில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனால் புதிய கட்டடம் பார்ப்பதற்குக் கடல் நடுவே மாபெரும் ட்ராகன் மிதப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறது.
கார்பன் வெளியேற்றைத் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் வகையிலான புதிய அலுவலகம் கட்டப்படும் என கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். 2030க்குள் கூகுள் நிறுவனம் முழுக்க முழுக்க கார்பன் வெளியேற்றமற்ற நிறுவனமாக மாற்றப்படும் என அவர் இலக்கு வைத்திருந்த நிலையில் தற்போது இந்தப் புதிய வளாகம் உருவாகி வருகிறது.
கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு வருகின்ற ஜனவரி மாதம் முதல் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இந்தப் புதிய வளாகம் இயங்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
பெருந்தொற்று காலம் என்பதால் நிறுவனத்தின் தலைவர் இந்தப் புதிய வளாகத்துக்குள் நுழைவதற்குக் கூடப் பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. நிறுவன வளாகத்தை முதன்முதலாகத் தற்போது நேரில் பார்வையிட வந்த கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, ‘இந்த தருணம் முன்னாடியே ஏற்பட்டிருக்கலாம்.
நமக்கான கால நேரம் மிகக் குறைவாக இருக்கிறதோ என்கிற அச்சம் இங்கே எல்லோருக்கும் உள்ளது. 2030க்குள் இந்த இலக்கை எப்படி அடையப் போகிறோம் எனத் தெரியவில்லை. ஆனால் இதற்காக நிறையத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூகுளின் டேட்டா மையம் கடந்த ஆண்டில் மட்டும் 15 மில்லியன் மெகா வாட் மின்சாரத்தை உபயோகித்திருந்தது.இதில் 67 சதவிகித மின் உற்பத்தி மீள் புதுப்பிப்பு ஆற்றல் வழியாக (Renewable energy) கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel Appappo Cinema for the latest Kollywood updates.