அரையிறுதிக்கு போவது யார்?
மெல்போனில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியாவின் கடைசி ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டி20 உலக கோப்பையில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரை இறுதி சுற்றுக்கு செல்ல முடியும். அப்படி இந்திய அணி ஒருவேளை தோல்வியை தழுவினால் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில் ரோகித் படை வெளியேறிவிடும்.
தற்போது points table -ல் இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.
இதன் மூலம் இந்திய அணி 7 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதல் இடத்தை நிறைவு செய்து அரையிறுதி சுற்றுக்குச் செல்லும். இதனால் மழை வந்தாலும் வராவிட்டாலும் சிக்கல் இல்லை.
ஆனால் போட்டி நடைபெறும் போது மழை வந்து தனது ஆட்டத்தை காட்டினால் டக்வொர்த் லூயிஸ் விதி ரோகித்தின் தலைவிதியில் விளையாடிவிடும்.
இதேபோன்று அடிலெய்டில் தென் ஆப்பிரிக்கா அணி, நெதர்லாந்தை தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் ஞாயிற்று கிழமை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு மழை என்றால் ராசி கிடையாது.
அப்படி இருக்க நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் தென்னாபிரிக்கா அணி தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.
அப்படி நடக்கும் பட்சத்தில் பங்களாதேஷை பாகிஸ்தான் வீழ்த்தினால் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் தகுதி பெறும்.
இதனால் மழை பெய்தாலும், பெய்யா விட்டாலும் இந்தியாவுக்கு தற்போது எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் தென்னாப்பிரிக்கா தொடரை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.