கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 17 வயது மாணவி மரமமான முறையில் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலம் நயினார்பாளையத்தில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, மாணவியின் குடும்பத்தார் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
இதில் பொலிசார் தாக்கப்பட்டதால் அப்பகுதியில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நயினார்பாளையத்தில் 31-ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17 வயதாகும் மாணவி ஸ்ரீமதி, கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சின்னசேலம் நயினார்பாளையத்தில் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் 6-ஆம் வகுப்பு படிக்கும் போது அப்பள்ளியில் சேர்ந்துள்ளார்.
11-ஆம் வகுப்பிற்கு வேறு பள்ளி மாற முயன்றுள்ளார். ஆனால் பள்ளியில் டிசி கொடுக்கவில்லை என்பதால், அங்கேயே படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
12-ஆம் வகுப்பு பள்ளிகள் தொடங்கிய பின், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜூலை 1-ஆம் திகதி பள்ளி ஹாஸ்டலில் சேர்ந்து படித்துவந்துள்ளார்.
இந்த நிலையில், ஜூலை 13-ஆம் திகதி ஸ்ரீமதிக்கு காயம் ஏற்பட்டதாக்க அவரது பெற்றோருக்கு தகவல் சொல்லப்பட்டு மருத்துவமனைக்கு வர சொல்லி உள்ளனர். அங்கு மாணவி இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
மகளின் உடலை பார்த்த பெற்றோர், தலையில், மார்பில் ரத்த காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் சந்தேகமடைந்து புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிந்து உள்ளனர்.
இதனையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 15-ஆம் திகதி வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், ஸ்ரீமதியின் ஸ்கூல் யுனிபார்மில் மேலாடை, கால் சட்டை, மேல் மற்றும் கீழ் உள்ளாடை என்று மொத்தம் 4 இடங்களில் ரத்த கரை இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அதோடு அவருக்கு தலையில், மூக்கில், தோள்பட்டையில் அடிபட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலில் இருந்த காயங்கள் எல்லாம் புதிய காயங்களாக இருந்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிக அளவில் ரத்தம் வெளியேறியது, காயங்கள் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சி ஆகியவைதான் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாணவி, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர் தற்கொலை செய்யவும் எந்த காரணமும் இல்லை என நம்புகின்றனர். இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்காண உண்மையான காரணம் இதுவரை தெளிவாகவில்லை.
இதனிடையே, போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.