வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீக்கு இதுவரை 38 பேர் பலியாகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உள்ளூர் ஊடகத்தினர் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இதுவரை குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், பெரும்பாலும் அல்ஜீரியாவின் கிழக்கு எல்லையான துனிசியாவிற்கு அருகிலுள்ள எல் டார்ஃப் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இப்பகுதியில் 48 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் தகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளதது. மட்டுமின்றி, குறைந்தது 200 பேர் தீக்காயங்கள் அல்லது புகையால் சுவாசக் கோளாறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, வனவிலங்கு பூங்காவிற்கு சென்றவர்கள் பலர் காட்டுத்தீயில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. டோங்கா ஏரியைச் சுற்றிலும் அவசரகால சேவைகள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
மட்டுமின்றி, பேருந்து ஒன்றுடன் 8 பேர் தீயில் கருகி பலியானதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 100 பெண்கள் மற்றும் 17 பச்சிளம் குழந்தைகளை வனப்பகுதிக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் தீக்கிரையான தங்கள் வீடுகளில் இருந்து உயிர் பயத்தில் வெளியேறி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீயணைப்பு சேவையின் தகவலின்படி, வடக்கு அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளை சுமார் 39 காட்டுத்தீ மொத்தமாக அழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீக்கு குறைந்தது 90 பேர் பலியானதாகவும் நாட்டின் வடக்கில் 100,000 ஹெக்டேர் காடு மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து, அல்ஜீரியாவில் 106 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதில், 800 ஹெக்டேர் காடுகள் மற்றும் 1,800 ஹெக்டேர் வனப்பகுதிகள் தீக்கிரையானதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.