மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் அம்பாசாரி பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி, இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த தாய் அவளிடம் கேட்டதற்கு, தனக்கு சில உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகக் கூறி தான் கருவுற்றதை மறைத்துள்ளார்.
இதையடுத்து தான் கர்ப்பமான ரகசியம் வெளியே தெரியாமல் இருக்க அவரது தாய் வெளியே சென்றதும், யூடியூப் வீடியோக்களை பார்க்கத் தொடங்கியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று சிறுமியின் தாய் வெளியே சென்றிருக்க, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு தானே சுய பிரசவத்தை அரங்கேற்றி இருக்கிறார் அந்த சிறுமி.
பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சுய பிரசவம் மூலமாக தனக்கு பிறந்த பெண் குழந்தையை யாருக்கும் தெரியாமல் உடனடியாக கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை தனது வீட்டில் ஒரு பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து வெளியே சென்றிருந்த சிறுமியின் தாய் உடல்நிலை குறித்து விசாரிக்கையில், தனக்கு நேர்ந்த கொடுமைகளை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார் அந்த சிறுமி.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் முதல்கட்டமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தப் பிறகு மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு கொலை குற்றம் சாட்டப்படும்.” என்று தெரிவித்துள்ளனர்.
கர்ப்பத்தை மறைத்து தனக்கு தானே சுய பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.