குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி
வேலைப்பளு காரணமாக பெற்றோருக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது குறைந்து வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு எதையும் பொறுமையாக சொல்லிக்கொடுக்க பெற்றோர்களிடம் நேரம் இருப்பது இல்லை.
எனவே சின்ன சின்ன தவறுகளுக்கு கூட குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது.
இதனால் குழந்தைகள் பெற்றோரின் சொல் பேச்சைக் கேட்காமல் போவது, வாக்குவாதம் செய்வது, அளவுக்கு அதிகமான குறும்புத்தனம், மதிப்பெண்கள் குறைவது போன்ற எதிர்மறையான விளைவுகளே திரும்ப கிடைக்கும் என மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மோசமான உடல் மற்றும் மன ஆரோக்கியம், பலவீனமான வளர்ச்சி, வன்முறைகளை நிகழ்த்துதல் போன்றவற்றிற்கு குழந்தைகளுக்கு உடல் ரீதியாக கொடுக்கப்படும் தண்டனைகளுக்கும் தொடர்பு உள்ளது.
“அடிக்காமல் குழந்தையை எப்படி நல்லொழுக்கத்துக்குக் கொண்டுவருவது?” என்பது பெற்றோர்களின் பொதுவான கேள்வியாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தையாக இருந்து போது தான் வாங்கிய அடிகளையும், அதனை எப்படி உணர்ந்து கொண்டார்கள் என்பதையும் உணர வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்கம் கற்பிக்கிறேன் என்ற பெயரில் அடித்து துன்புறுத்த காரணம் சமூக அழுத்தமே ஆகும். இந்த சமூகம் குழந்தையை எப்படிப் பார்க்குமோ, தங்கள் குழந்தையின் வருங்காலம் எப்படியிருக்குமோ என்ற பதற்றமும், அவர்களது எதிர்காலம் குறித்த பயமுமே பெற்றோர்களை தவறான வழிக்குத் தள்ளுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பரிசு கொடுங்கள்:
குழந்தைகளின் நல்ல பழக்கத்தை உற்சாகப்படுத்தும் விதமாக பெற்றோர்கள் அவர்களுக்கு பரிசுகளை வழங்கலாம். பரிசு பொருட்களால் பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவார்கள் என பல பெற்றோர்கள் நினைக்கின்றனர். ஆனால் பிள்ளைகளின் நல்ல நடத்தைக்காக வெகுமதி கொடுப்பது, அந்த பழக்கங்களை தொடர்ந்து வலுப்படுத்த உதவுகிறது.
தவறுகளை மன்னியுங்கள் :
குழந்தைகள் என்றாலே சின்னச் சின்ன தவறுகளையும், குறும்புகளையும் செய்யத் தான் செய்வார்கள். எனவே குழந்தைகளின் சிறிய தவறுகளை மன்னித்து அவர்களுக்கு அதைப் பற்றி விளக்குங்கள்.
அதேபோல் கவனத்தை ஈப்பதற்காக குழந்தைகள் செய்யும் சிணுங்கல்களையும், சேட்டைகளையும் சட்டை செய்யாமல் விட்டுவிடுங்கள். அப்போது தான் குழந்தைகளை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் இருக்கும்.
தவறுகளை உணர செய்யுங்கள்
தவறு செய்தால் அடி தானே விழும் என்ற எண்ணம் குழந்தைகளை எதையும் செய்யத் தூண்டும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளை அடிப்பதற்கு பதிலாக அவர்களது தவறுகளை உணரவைக்க முயல வேண்டும்.
உங்கள் குழந்தை ஏதாவது தவறு செய்கிறது என்றால் அதற்கு தண்டனையாக அவருக்கு பிடித்த விஷயத்தை நிறுத்தலாம். அதாவது ஐஸ்கிரீம், சாக்லெட், பூங்காவிற்கு செல்வது, டி.வி. பார்க்க அனுமதிப்பது, வீடியோ கேம் என உங்கள் குழந்தைக்கு பிடித்த விஷயங்களுக்கு தடை விதிக்கலாம்.
இதன் மூலமாக தவறு செய்தால் நமக்கு பிடித்த விஷயம் கிடைக்காமல் போகக்கூடும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க முடியும்.