Save 20% off! Join our newsletter and get 20% off right away!

இலங்கையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தப்பினார்? பரபரப்பு தகவல்

இலங்கையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியுடன் தப்பி மாலத்தீவுக்கு சென்று விட்டார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மறுபுறம் என அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை ஜனாதிபதி மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், கொழும்புவில் உள்ள ஜனாதிபதி வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் தற்போது வரை அங்கேயே உள்ளனர்.

வீட்டை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களை பயன்படுத்தியும், உணவு உண்டு, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டும் உள்ளனர். இது தொடர்புடைய வீடியோக்களும் வெளிவந்தன.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை ஜனாதிபதி பதவியை கோட்டாபய ராஜபக்ஷ 13ந்தேதி (இன்று) ராஜினாமா செய்வார் என நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா இரு தினங்களுக்கு முன் கூறினார்.

இந்நிலையில், இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ, முன்பே அறிவித்தது போன்று ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுகிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் அதிகாரப்பூர்வ முறையில் தெரிவித்து உள்ளார். இதனை இலங்கை பிரதமர் அலுவலகம் உறுதி செய்தது.

கோட்டாபய ராஜபக்ஷ கடற்படை முகாம் தளத்தில் தங்கியிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் இருந்து வெளியேறியதாக நேற்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் அது உண்மையில்லை என்று சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.

இந்தநிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என தகவல் வெளியானது. அவர் ஜூலை 13ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டு கோட்டாபய ராஜபக்ஷ கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளார் என கூறப்பட்டது.

இலங்கையின் முன்னாள் நிதி மந்திரியான பசில் ராஜபக்சே, அந்நாட்டில் இருந்து தப்பி துபாய்க்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக புறப்பட்ட அவரை விமான நிலையத்தில் அடையாளம் கண்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, அவர் விமான நிலையத்தில் இருந்து திரும்பி இலங்கையிலேயே தங்கினார். இந்த சூழலில், கோட்டாபய ராஜபக்ஷ விமானத்தில் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இலங்கையில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனைவி, பாதுகாவலர் என மொத்தம் 4 பயணிகளுடன் இன்று அதிகாலையில் அண்டை நாடான மாலத்தீவுக்கு தப்பி சென்று விட்டார் என கூறப்படுகிறது. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆன்டனோவ்-32 ரக விமானத்தில் அவர்கள் அனைவரும் பயணித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.