Malayagam
Home » Thunivu review: துணிவு விமர்சனம்

Thunivu review: துணிவு விமர்சனம்

Thunivu review: துணிவு விமர்சனம்

Thunivu review: துணிவு விமர்சனம்

சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் சட்ட விரோதமாக வைத்திருக்கும் ரூ.500 கோடியை கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறது, போலீஸ் அதிகாரி (அஜய்) உதவியுடன் ஒரு கும்பல். அதன்படி வங்கிக்குச் செல்லும் கும்பல், வாடிக்கையாளர்களை மடக்கி வைத்திருக்கிறது. அந்தக் கும்பலை துப்பாக்கிமுனையில், தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் சர்வதேச கேங்ஸ்டர், டார்க் டெவில் (அஜித்).

அவரைப் பிடிக்க கமிஷனர் (சமுத்திரக்கனி) தலைமையில் போலீஸ் டீம் களமிறங்குகிறது. என்ன வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அது பலனளித்ததா? கேங்ஸ்டர் டார்க் டெவில் யார்? உண்மையிலேயே வங்கியில் கொள்ளையடிக்க நினைத்தது யார்? என்பதை ஆக் ஷனுடனும் அருமையான மெசேஜுடனும் சொல்கிறது ‘துணிவு’.

முந்தையை இரண்டு படங்களைவிட அஜித்தின் பலத்துக்கும் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற கதையை பக்காவாகச் செய்திருக்கிறார், இயக்குநர் ஹெச்.வினோத். அதில் தர்க்கப் பிழைகள் தாராளமாக இருந்தாலும் ரசிகர்களின் கைதட்டல்களிலும் விசில் சத்தங்களிலும் அவை காணாமல் போகின்றன.

Thunivu review: துணிவு விமர்சனம்

‘என்டர்டெயின் பண்றவங்களைத் தான் மக்கள் தலைவனா ஏத்துப்பாங்க, கருத்துச் சொல்றவங்களை இல்லை’ என்று படத்தில் ஒரு வசனம் வருகிறது. அதையே இந்தப் படத்துக்கானதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு மனிதனின் பணத் தேவை, எப்படி ஒருவனை ஏமாற்றுபவனாகவும், இன்னொருவனை ஏமாறுபவனாகவும் மாற்றுகிறது என்பதை ‘சதுரங்கவேட்டை’யில் சொன்ன வினோத், இதில் எதைச் சொன்னாலும் எளிதாக ஏமாந்துவிடும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் வங்கிகளின் இன்னொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார்.

அவசரத்துக்கு கடன் தர்றோம் என்று அள்ளிவிடும் வங்கிகளின் விதிமுறைகள், கிரெடிட் கார்டு, மியூச்சுவல் பண்ட் என பக்கம் பக்கமாகக் கண்ணுக்கு எளிதில் தெரியாத எழுத்துகளில் தரும் படிவங்களில் என்ன இருக்கிறது என்பதை தோலுரித்து, மக்களை எச்சரிக்கிறது படம்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் அஜித். வயதுக்கேற்ற தோற்றத்தில் வழக்கம்போல அதகளம் செய்கிறார். அவரின் வில்லத்தன ஆட்டம் ரசிக்க வைக்கிறது. ஆக் ஷன் காட்சிகள், ‘சில்லா சில்லா’ டான்ஸ், நையாண்டி வசனங்கள் என மிரட்டி இருக்கிறார். அவருக்கு உதவி செய்யும் கண்மணி கேரக்டரில் மஞ்சு வாரியர் ஆக் ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். படம் முழுவதும் அவர் வந்தாலும் நிறைவுதரும் பாத்திரம் என்று சொல்லிவிட முடியாது.

அமைதியான கமிஷனர் சமுத்திரக்கனி, நின்ற இடத்தில் இருந்தே தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். தெலுங்கு நடிகர் அஜய், வில்லன் ஜான் கொக்கேன், வங்கி அதிகாரி ஜி.எம்.சுந்தர், போலீஸ்காரர் மகாநதி சங்கர், வீரா உட்பட பலர் தங்கள் கேரக்டர் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி பெருமாளுக்கும் சேனல் செய்தியாளர் மோகனசுந்தரத்துக்கும் நடக்கும் உரையாடல் சுவாரஸ்யம்.

‘மனுசன் ஏன் சுயநலமா இருக்கான். சுயநலமா இருக்கறதால தான் மனுசனாவே இருக்கான்’ என்பது போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. சுப்ரீம் சுந்தரின் சண்டைக் காட்சிகளில் தெறிக்கிறது ‘புல்லட்’கள். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஆக்‌ஷன் காட்சிகளில் மேஜிக்கை நிகழ்த்துகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.

முதல் பாதியில், ஒவ்வொரு காட்சியும் அடுத்தது என்ன என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. ஆனால் இரண்டாம் பாதி திரைக்கதையில் தடுமாற்றம். குறிப்பாக அந்த பிளாஷ்பேக் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அஜித், மஞ்சு வாரியரின் பின்னணி பற்றி போதுமான விளக்கமும் இல்லை. அதை சரி செய்திருந்தால், ‘துணிவு’ இன்னும் மிரள வைத்திருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed