பொகவந்தலாவை குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார்.
அத்துடன், தோட்டத்தில் உள்ள நான்கு தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பொகவந்தலாவை நகரில் உள்ள வெற்றிலை விற்பனை செய்யும் கடை ஒன்று பூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பிலிருந்து குயினா தோட்டத்திற்கு வருகை தந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து, கடந்த 28ஆம் திகதி அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் எழுமாறாக தெரிவு செய்யப்பட்டவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகள் இன்று (01) வெளியானபோது, மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இவர்களில், ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஐந்து பேரும் பொகவந்தலாவை நகரில் வெற்றிலை விற்பனையில் ஈடுபடும் நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவர்களுடன் நெருக்கமான தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்தவும், தொற்றுக்குள்ளான நபர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறித்த வெற்றிலை வியாபாரின் கடைக்கு பல தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் வெற்றிலை வாங்கி சென்றுள்ளதாக சுகாதார தரப்பினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
(க.கிஷாந்தன்)
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, மலைஒளி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.