இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நகைகளை திருடியதாக, பணிப்பெண்ணின் ஆடைகளை களைந்து சித்திரவதை செய்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் மைதான்கார்கி பகுதியில் உள்ள ஒரு பெரிய பங்களாவில் 10க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் 10 மாதங்களுக்கு முன்பு அந்த பங்களாவில் பணம் மற்றும் நகை திருடு போயுள்ளது.
இதனை கண்டுபிடிக்க வீட்டின் உரிமையாளரான சீமா கட்டூன் (28) பல வழிகளில் முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கடந்த 8ஆம் திகதி வீட்டிற்கு மந்திரவாதியை வரவழைத்த அவர், தனது வேலையாட்களை அழைத்து வந்து அரிசி மற்றும் சுண்ணாம்பு பொடியை உண்ண வைத்துள்ளார்.
யாருடைய அரிசி சிவப்பாக மாறுகிறதோ அவர் தான் திருடன் என மந்திரவாதி கூறியதால் இவ்வாறு அவர் நடந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் 43 வயதுடைய பெண்ணொருவரின் வாயில் அரிசி சிவந்ததால் அவர் தான் குற்றவாளி என முடிவு செய்து, வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது தாய் இருவரும் அப்பெண்ணின் கை, கால்களை கட்டி ஓர் அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
பலமணிநேரம் அவரை குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி துன்புறுத்தியுள்ளனர். மறுநாள் அப்பெண்ணின் ஆடைகளை களைந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அவர்களிடம் இருந்து தப்பிக்க நகைகளை திருடியதாகவும், அவற்றை கிராமத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும் குறித்த பணிப்பெண் கூறியுள்ளார்.
இதனை நம்பிய உரிமையாளர் ஆடைகளை திருப்பி கொடுத்து மற்றோரு அறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது எலி மருந்தை கையில் எடுத்த அப்பெண், தனக்கு நேர்ந்த அவமானத்தால் உயிரை விட நினைத்து அதனை சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் காவல் நிலையம் சென்ற அப்பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை பொலிசாரிடம் புகாரில் தெரிவித்தார். உடனடியாக அந்த வீட்டிற்கு சென்ற பொலிசார் சீமா கட்டூனை கைது செய்தனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.